/vanikaviyal_agarathi_repo

வணிகவியல் அகராதி | அ.கி.மூர்த்தி | எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டுச் சிறப்பு வெளியீடு | Thanks to https://ta.wikisource.org/s/1w52

GNU General Public License v3.0GPL-3.0

vanikaviyal_agarathi

வணிகவியல் அகராதி | அ.கி.மூர்த்தி | எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டுச் சிறப்பு வெளியீடு | மணிவாசகர் பதிப்பகம்8/7 சிங்கர்தெரு, பாரிமுனை,சென்னை-600108.

பதிப்பாசிரியர்

டாக்டர் ச. மெய்யப்பன்
டாக்டர் ச. மெய்யப்பன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்; திருக்குறள் இயக்கம், திருமுறை இயக்கம், தமிழிசை இயக்கம், தமிழ்வழிக்கல்வி இயக்கம் முதலிய தமிழியக்கங்களில் முழுமூச்சுடன் ஈடுபட்டு உழைப்பவர்; தமிழகப் புலவர் குழு உறுப்பினர்; பல்கலைக் கழகங்களின் பதிப்புக்குழு உறுப்பினராகச் சிறப்பாகச் செயலாற்றி வருபவர். இவர், தமிழ் நாட்டில் பல பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார்; பதினாறு நூல்களின் ஆசிரியர். இவர் எழுதிய ‘தாகூர்’ நூல் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது. தமிழ் நூல் வெளியீட்டுத் துறையில் சாதனைகள் பல புரிந்த செம்மலாகிய இவர், துறைதோறும் தமிழுக்கு ஆக்கம் தரும் நல்ல நூல்களைச் செம்பதிப்பாக வெளியிடுவதைத் தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டுள்ளார். இவருடைய தமிழ்ப் பணியைப் பாராட்டிக் குன்றக்குடி அடிகளார், ‘தமிழவேள்’ என்னும் விருதினை வழங்கியுள்ளார். குளித்தலை கா.சு. பிள்ளை இலக்கியக்குழு, ‘தமிழ்நெறிக் காவலர்’ என்னும் விருதினை அளித்து இவரைச் சிறப்பித் துள்ளது. பதிப்புச் செம்மல் என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர்.

துறைதோறும் தமிழ்

பதிப்பாசிரியர் தமிழவேள் ச. மெய்யப்பன்

தமிழ் மொழி சொல் வளம் மிகுந்த மொழி. மானுடவியல் சார்ந்த கருத்துக்கள் எவற்றையும் தமிழில் எழுத முடியும். இலக்கியச் சொற்கள் நூறாயிரத்திற்கும் மேல் தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் உள்ளன.

புதிய புதிய துறைகளில் புதிய கருத்துக்கள் நாளும் பெருகி வருகின்றன. சொல் புதிது, பொருள் புதிது எனப் பாரதியாரின் மொழிக் கேற்பத் தமிழில் துறைதோறும் சொற்கள் பெருகி வருகின்றன. புதிய துறைகளைக் கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் புதிய அகராதிகள் காலத்தின் கட்டாயமாகின்றன. இந்த வகையில் வணிகவியல் அகராதி முன்னோடியாகத் திகழ்கிறது.

விடுதலைக்குப் பின் இந்திய மொழிகள் வீறு பெற்றன. தாய் மொழி மூலம் உயர்கல்வி கற்பிக்கும் நிலை மேலோங்கி வருகிறது. தமிழ் நாட்டில் தமிழ் வழிக் கல்வி வேண்டும் என்னும் கருத்து வேர் ஊன்றிவிட்டது. ஒவ்வொரு மொழியிலும் கலைச் சொல்லாக்கம் அரிய கலையாகவே உள்ளது. அறுபது எழுபது ஆண்டுகளாகத் தமிழில் கலைச் சொல்லாக்க முயற்சி நடந்து வருகிறது.

தமிழ்நாளிதழ்கள், தமிழ்வளர்ச்சிக் கழகத்தின் கலைக் களஞ்சியம், தமிழ்ப் பல்கலைக்கழக வாழ்வியல் களஞ்சியம், கலைக் கதிர் வெளியீடான சொற்களஞ்சியத்தின் 3 தொகுதிகள், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் மானிடவியலில் 10-க்கு மேற்பட்ட துறைகளில் வெளியிட்ட நூற்றுக்கு மேற்பட்ட பாடநூல்கள் முதலியவற்றில் கலைச் சொற்கள் பல்கிக் கிடக்கின்றன. அவற்றில் விரவிக் கிடக்கும் பொருளியல், நிதியியல், வணிகவியல் சொற்கள் அனைத்தும் இங்கே முறையாக அகரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன. ஆங்கிலச் சொற்களுக்கு ஏற்ற சரியான தமிழ்ச் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பொருள் துல்லியமாகக் கூறப்பட்டுள்ளது. தரப்படுத்தப்பட்ட சொல்லாக்கங்களே பெரிதும் பயன்படுத்தப் பட்டுள்ளன. பொருள் விளக்கத்திற்கு விளக்கங்களும் வரையறை-

விழுக்காட்டினர் தமிழ் வழியிலேயே தேர்வு எழுதுகின்றனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த அகராதி மிகுந்த பயன் தரும். இவ்வகராதியை உருவாக்கியவர் தஞ்சையின் புகழ்பெற்ற பள்ளியில் பெருமைமிகு தலைமை ஆசிரியராகத் திகழ்ந்தவர்; பல்துறை அறிவினர்; ஆசிரியர், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அறிவியல் சொற்களைத் தொகுத்து வகைப்படுத்திச் சரியான பொருள் எழுதி மிகச் சிறந்த அறிவியல் அகராதியை உருவாக்கியவர். சிறந்த மொழி பெயர்ப்பாளர் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் மொழியாக்கம் செய்பவர். செய்வன திருந்தச் செய்யும் செம்மல். பரிசுகள் பல பெற்ற நல்லாசிரியர். இவரின் கடுமையான உழைப்பின் விளைச்சல் இந்நூல்.

10க்கும் மேற்பட்ட அகராதிகளை வெளியிட்ட மணிவாசகர் பதிப்பகம் இந்த அகராதியை பெருமகிழ்வுடன் வெளியிடுகிறது. எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டிற்கு வெளியிடும் சிறப்பு வெளியீடு 10இல் இது 10ஆவது. தமிழ் நாட்டு மாணவர்கள் இதனைப் பயன்படுத்தி வணிகவியல் அறிவு பெறுவதோடு வளர்தொழில் வளர்க்கும் தொழில் முனைவராக வருதல் வேண்டும் என்பது பதிப்பகத்தின் வேணவா துறைதோறும் தமிழுக்குத் தொண்டு செய்து நாளும் உயர்வோம்.

முன்னுரை

வணிகவியல் அகராதி என்னும் இவ்வகர முதலி, இத்துறையில் முதன் முதலில் வெளிவரும் அகராதி. பதிப்பு ஆசிரியரும் தமிழ் வேருமாகிய முனைவர் ச.மெய்யப்பன் அவர்கள் தமிழ்ப் பேராசிரியர் பணியிலிருந்து ஒய்வு பெற்ற பின், முழு நேரமும் தமிழுக்கு முழுதும் பயனுள்ள நூல்களை வெளியிட்டு வருவது அனைவரும் பாராட்டி வரவேற்கத்தக்க முயற்சியாகும். அதன் விளைவுகள் இரண்டாக மலர்ந்தவையே அறிவியல் அகராதியும், வணிகவியல் அகராதியும் ஆகும். வணிகவியல், கணக்குப் பதிவியல் ஆகிய இரு துறைகளின் சொற்கள் 1500 திரட்டப்பட்டு, அவற்றிற்கு வாசகர்களை மையமாகக் கொண்டு எளிய விளக்கம் தரப்பட்டுள்ளது. இவ்விரு துறைகளோடு தொடர்புடைய பொருளியல், வங்கி இயல், காப்புறுதி முதலிய துறைகள் சார்ந்த சொற்கள் உரிய இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. கணக்கெழுதுங்கலை தமிழில், தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வரும் கலையே. கணிப்பொறித் தாக்கம் பெறாத எத்துறையும் இக்காலத்தில் இல்லை. ஆகவே, அத்துறைச் சொற்களும் சில, வேண்டிய இடத்துச் சேர்க்கப்பட்டுள்ளன. அண்மைக்காலத்தில் இத்துறையில் அறிவியல் தாக்கம் பெற்ற உலர் நகலி, உருநகலி, தொலை யதிர்வச்சு, உருக்காட்சி முதலிய பல சொற்களும் பதிவு பெற்றுள்ளன. கலைச் சொற்களை அளவை செய்யும் நெறிமுறைகள், இவ்வாசிரியர் நிலைபேறுள்ளதாக உருவாக்கியுள்ள அறிவியல் அகராதியில், அறிஞர்கள் ஏற்புடன் பின்பற்றிய சீரிய நெறி முறைகளே ஆகும். அவற்றை அவ்வகர முதலியில் கண்டு கொள்க. அறிமுறைமட்டும் விளக்கப்பட்டுள்ள வணிகவியல், கணக்குப்பதிவியல் ஆகிய இவ்விருதுறைகள் பற்றி அனைவரும் குறிப்புதவி பெற, இவ்வகரமுதலி பெரிதும் பயன்படும். தமிழ் மட்டும் கற்றவர் நலங்கருதித் தமிழ்ப் பொருளடைவும் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வகர முதலியை, அறிவியல் அகராதியை அடுத்து, மிகக் குறுகிய காலத்தில் வெளியிட்டுள்ள பதிப்பாசிரியர் முனைவர் ச. மெய்யப்பன் அவர்களுக்குத் தோன்றாத் துணையாகவுள்ள மேலாளர் திரு. இரா. குருமூர்த்தி அவர்களுக்கும் இவ்வாசிரியனின் நன்றியும் வணக்கமும் உரியவாகுக. வாசகர் களை மையமாகக் கொண்ட இவ்வகர முதலிபற்றி அவர்கள்தம் கருத்தேற்றங்கள் பெரிதும் இனிது வரவேற்கப்படுகின்றன.

"மெய்ப்பொருள் காண்ப தறிவு"

அ.கி. மூர்த்தி

தொ.பே. 20139

தொல்காப்பியரகம்

திருவள்ளுவர் அச்சகம்

தஞ்சாவூர் 613 009.

====

Thanks to Wikipedia to make it possible https://ta.wikisource.org/s/1w52 and thanks to Themozhi who gave this links to produce the New dict.

===

Pitchaimuthu M. | https://thanithamizhakarathikalanjiyam.github.io/